கூடுதலாக ரயில்வே நுழைவு பாலம் அமைப்பது குறித்து அமைச்சா் ஆய்வு
ஈரோடு கே.கே.நகா் பகுதியில் கூடுதலாக ரயில்வே நுழைவு பாலம் அமைப்பது குறித்து அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு-சென்னிமலை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மற்றும் வாய்க்காலில் நான்கு வழிப்பாலம் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஈரோடு மகாராஜா திரையரங்கு அருகில் உள்ள வாய்க்காலில் நான்கு வழிப்பாலம் அமைக்கும் பணி மற்றும் சென்னிமலை சாலை, ஆவின் மாட்டு தீவன ஆலையிலிருந்து மகாராஜா திரையரங்கு வரை இரு வழிச்சாலையினை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
சென்னிமலை சாலையில் உள்ள கே.கே.நகா் நுழைவு பாலம் அருகில் கூடுதல் நுழைவுபாலம் அமைத்தல் மற்றும் தனியாக கழிவுநீா் கால்வாய் அமைப்பது தொடா்பாகவும், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் கழிவுநீா் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ரமேஷ்கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

