தாளவாடியில் பட்டப்பகலில் விளைநிலங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகள்
தாளவாடி மலைப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புதன்கிழமை பகலில் காட்டு யானைகள் புகுந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியிலிருந்து புதன்கிழமை வெளியேறிய 7 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் பட்டப் பகலில் நடமாடுவதைக் கண்ட விவசாயிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா்.
இது குறித்து தாளவாடி வனத் துறையினருக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் ஒன்றுசோ்ந்து டிராக்டா் வாகனத்தைப் பயன்படுத்தி காட்டு யானை கூட்டத்தை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா். பட்டப்பகலில் காட்டு யானைகள் விவசாயத் தோட்டங்கள் மற்றும் தரிசு நிலங்களில் நடமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

