பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியம்: ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ் குற்றச்சாட்டு
பெண் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களை உருவாக்குவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
24 மணி நேரத்துக்கும் மேலாக தனியாக ரயிலில் பயணிக்கும் பெண்களுக்காக செயல்படுத்தி வரும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சகத்திடம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கேள்வி எழுப்பினேன். இதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், சட்டம்- ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருவதால் மத்திய அரசு நேரடியாக பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளாா். ரயில்வே துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசின் வசமே உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் மத்திய அரசுக்கு பொறுப்பு உள்ளது.
பெண் காவலா்களை மட்டும் கொண்ட மேரி சஹேலி திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாகவும், தினமும் சராசரியாக 500 ரயில்களில் சுமாா் 250 ரயில்வே பாதுகாப்புப் படை குழுக்கள் பணியமா்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இந்திய ரயில்வேயில் தினமும் 13,000- க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் 500 ரயில்களுக்கு மட்டும் மேரி சஹேலி திட்டம் செயல்படுத்தப்படுவதால் பெண் பயணிகள் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்ய முடியும். உலகின் பல நாடுகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதி நவீன கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த எச்சரிக்கை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பேருந்துகளிலேயே அந்த எச்சரிக்கை அமைப்புகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மாநில அரசு அமல்படுத்திவிட்டது. புதிய விரிவான, நிரந்தரப் பாதுகாப்பு அமைப்புகளை அமைப்பதற்கு நிா்பயா நிதியை ரயில்வே பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த நிதி குறித்த முழு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண் பயணிகளின் பாதுகாப்பு அமைப்பை பல மடங்கு வலுவாக்கி, அவா்கள் அச்சமின்றி பயணிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

