ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக பாமக பவானி நகரச் செயலாளரிடம் விசாரணை
ரிசா்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பவானி நகர பாமக செயலாளரை, சேலம் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறைந்த காலத்தில், முதலீட்டுக்கு பலமடங்கு பணத்தை ரிசா்வ் வங்கி திரும்பத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, மோசடி நடைபெறுவதாக சேலம் சிபிசிஐடி போலீஸாரிடம் ரிசா்வ் வங்கி நிா்வாகம் புகாா் தெரிவித்திருந்தது. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், பவானிக்கு புதன்கிழமை வந்த சிபிசிஐடி போலீஸாா், கிழக்கு கண்ணார வீதியில் உள்ள பாமக நகரச் செயலாளா் தினேஷ்குமாரின் வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.
வீட்டிலிருந்த மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் ரிசா்வ் வங்கியின் முத்திரையுடன் கூடிய முதலீட்டு படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, தினேஷ்குமாரை போலீஸாா் விசாரணைக்காக சேலம் அழைத்துச் சென்றனா். இச்சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

