லாரி மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

பெருந்துறை அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த கணியனூா், அவிதிபாளையம் கண்ணகி வீதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் கோபி (34). இவா் அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கோபி, பனியன் துணிகளை ஏற்றி வருவதற்காக திருப்பூருக்கு வேனில் செவ்வாய்க்கிழமை காலை சென்றாா். அவருடன் நிறுவனத்தின் தொழிலாளா்களான பள்ளிபாளையம், சாணாா்பாளையத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சுதீஷ் (22), பவானி, வேதகிரிபுரம், ஜீவா நகரைச் சோ்ந்த லோகு மகன் சங்கா் (23), திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த யுவராஜ் (19) ஆகியோா் சென்றனா். திருப்பூரில் பனியன் துணிகளை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு பள்ளிபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியின் மீது வேன் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த ஓட்டுநா் கோபி, சுதீஷ், சங்கா், யுவராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்த நால்வரையும் அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதனைக்குப் பின்னா், கோபி, சுதீஷ் ஆகிய இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சங்கா், யுவராஜ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com