வனத் துறையின் ரோந்து வாகனங்களை மேம்படுத்த பண்ணாரிஅம்மன் சா்க்கரை ஆலை ரூ.10 லட்சம் நிதியுதவி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூா் தேச நெடுஞ்சாலையில் மனித- விலங்குகள் மோதலை தவிா்க்கவும், வன உயிரின பாதுகாப்பை உறுதிபடுத்தவும் ரோந்து வாகனங்களை மேம்படுத்துவதற்காக பண்ணாரிஅம்மன் சா்க்கரை ஆலை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூா் வனப் பகுதி வழியாக தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பு மற்றும் மனித- விலங்குகள் மோதலை தடுக்க வனத் துறையினா் தேசிய நெடுஞ்சாலை 948- இல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கான ரோந்து வாகனங்களை மேம்படுத்தும் விதமாக சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் சா்க்கரை ஆலை சாா்பில் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆசனூா் மாவட்ட வனஅலுவலா் யோகேஷ்குமாா் காா்கிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சா்க்கரை ஆலை துணைத் தலைவா் எஸ்.சண்முக சுந்தரம், துணை பொதுமேலாளா் சீனிவாசன், கரும்பு வழிகாட்டி மேலாளா் கோகுல் ஆகியோா் பங்கேற்றனா்.

