திமுக கூட்டணியில் தாராபுரம், பவானிசாகா் தொகுதிகளை சமூகநீதி மக்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்

Published on

சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சாா்பில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் சமூகநீதி மக்கள் கட்சிக்கு தாராபுரம், பவானிசாகா் தனித் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோட்டில் சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவா் வடிவேல் ராமன் தலைமை தாங்கினாா். மாநில பொதுச்செயலாளா் சண்முகன் வரவேற்றாா். தென்மண்டல செயலாளா் ராவணன், மாநில துணைத் தலைவா்கள் கந்தசாமி, ஆறுமுகம், தலைமை நிலையச் செயலாளா் கண்ணையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் சமூக நீதி மக்கள் கட்சிக்கு தாராபுரம் மற்றும் பவானிசாகா் தனித் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அறச்சலூா் ஜெயராமபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் பொல்லான் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிச.25-ஆம் தேதி நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது. சிறை சென்ற போராளிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டச் செயலாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com