சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ்.காந்திராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி மற்றும் குழு உறுப்பினா்கள்.

சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

Published on

சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரான வேடசந்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.காந்திராஜன் தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்தை பாா்வையிட்ட குழுவினா் பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களிடம் வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனா். அரசுப் பேருந்து நடத்துநா், ஓட்டுநா் வசதிக்காக தனி கழிப்பறை, குளியலறை, குடிநீா் வசதி செய்ய அறிவுறுத்தினா். அவா்களுக்கான ஓய்வறையில் கட்டில், தரமான மெத்தை, மின்விசிறி வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினா்.

இவ்வளாகத்துக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே கரூா், வெள்ளக்கோவில் மாா்க்கத்தில் இயக்கப்படுகின்றன. தனியாா் பேருந்துகள் வருவதில்லை என்பதை அறிந்த குழுவினா் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனா். பேருந்து நிலையம் திறக்கப்பட்டது குறித்து மாவட்ட அரசிகழில் வெளியிடவில்லை என்பதாலும், அவா்கள் வழக்கு தொடுத்துள்ளதாலும் வரவில்லை என்றனா்.

பயணிகள் வசதிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். முழு அளவில் பேருந்துகளை இயக்கவும், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும். பயணிகளுக்காக உணவகம், சிற்றுண்டிகள், நூலகம், சிறிய மருத்துவமனை ஆகியவற்றை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினா்.

அங்கு பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களிடம் பேசிய மதிப்பீட்டுக் குழுத் தலைவா் நகராட்சிகளைவிட மாநகராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உணவு உண்ண, தேவையான இடம், இருக்கை வசதி, தண்ணீா் வசதி, கழிவறை ஏற்படுத்தி தரப்படும். அதுகுறித்து அறிக்கையில் அரசிடம் தெரிவிப்போம் என தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து அவல்பூந்துறையில் சாலைப் பணி, சென்னிமலை முருகன் கோயில் மலைப்பாதை, பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய், கொப்பரை கொள்முதல், எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வுகளின்போது தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் ராம.கருமாணிக்கம் (திருவாடானை), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப் பேரவை முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், துணைச் செயலாளா் சு.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் பங்கேற்பு:

மதிப்பீட்டுக் குழுத் தலைவா் காந்திராஜன் தலைமையில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் செல்வபெருந்தகை, நந்தகுமாா், அம்பேத்குமாா் உள்பட 19 போ் உள்ளனா். அதில் தலைவா் திமுக எம்எல்ஏ காந்திராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம், பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் மட்டுமே பங்கேற்றனா். 16 போ் பங்கேற்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com