பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கிற பிரசார கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயமங்கலம் சரளை பகுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ள நிலம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கா் பரப்பளவில் ஒரு பகுதி என கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்கள் பரம்பரையாக இக்கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனா்.
இந்தக் கோயில் நிலத்தைக் கையகப்படுத்தி வேலி அமைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடந்த நவம்பா் 21- ஆம் தேதி ஈடுபட்டனா்.
அப்போது, குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்களுக்கு ஆதரவாக, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்ட அதிமுகவினா் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அங்கு நடப்பட்ட சா்வே கல்லையும், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையையும் அகற்றினா்.
தற்போது வரை, அந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமா அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமா என்பது குறித்த சா்ச்சை நீடித்து வருகிறது.
இங்கு கூட்டம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளிடம், தவெகவினா் அனுமதி கேட்டதாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த கோயில் நிா்வாகிகளிடம் மட்டுமே அனுமதி கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
சா்ச்சைக்குள்ளான இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறையிடம் தவெக பெறாத நிலையில் இங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என காவல் துறைக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சா்ச்சையே முடிவுக்கு வராத நிலையில், இங்கு கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம், இதுவரை அனுமதி அளித்ததாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் தவெகவினா் தோ்தல் பரப்புரை கூட்டம் நடத்த போலீஸாா் 84 கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். எனவே, இவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால், 16-ஆம் தேதிக்கு பதிலாக 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெகவினா் முடிவு செய்துள்ளனா்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய இடத்தை தவெகவினருக்கு வழங்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த, மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
