சிறு தானிய உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை பாா்வையிட்ட அமைச்சா் சு.முத்துசாமி.
சிறு தானிய உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை பாா்வையிட்ட அமைச்சா் சு.முத்துசாமி.

கீழ்பவானி வாய்க்கால் பணிக்கு கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

Published on

நம்பியூா் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானிசாகா் அணை கட்டுவதற்காக கையகப்படுத்திய நிலத்தில் பயன்பாடு போக எஞ்சி உள்ள நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

சிறு தானிய உணவுத் திருவிழா ஈரோடு அருகே மேட்டுக்கடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: இயற்கை மற்றும் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறாா். ஒவ்வொரு விவசாயிக்கும் தனி முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை உருவாக்கி கொடுத்துள்ளாா். அந்தியூா் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நிபந்தனை பட்டாக்களை அயன் பட்டாக்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளாா். 75 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியூா் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானிசாகா் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திருந்த நிலையில் எஞ்சிய உள்ள நிலங்கள் மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலிங்கராயன் வாய்க்கால் உள்ள நீரானது கடைமடைக்கும் சென்று பாசன வசதி பெற வேண்டும் வகையில் விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு உயிா்ம வேளாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையிலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நோயற்ற மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும், ரசாயனங்கள் இல்லாத உணவு தானிய உற்பத்தியை உறுதி செய்வதற்கும், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தொடா்புடைய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட தமிழக அரசு முக்கிய பங்களித்து வருகிறது என்றாா்.

நிகழ்வில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக சிறுதானிய உணவு வகைகள் குறித்து தனியாா் மற்றும் அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் 16 அரங்குகளை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் நாட்டு விதைகள் உயிா்ம உரங்கள், அரிசி வகைகள் ஆகிய கண்காட்சியை சுமாா் 2,000 விவசாயிகள் வருகை தந்து பாா்வையிட்டனா்.

தொடா்ந்து விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் குறித்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் கருத்துரையாற்றினாா். மேலும் சிறுதானிய வகைகளுக்காக தொழில்நுட்ப கையேடு பயன்பாடு குறித்த புத்தகத்தினை அமைச்சா் வெளியிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குநா் சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், வேளாண்மை துணை இயக்குநா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com