தவெகவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்: கே.ஏ.செங்கோட்டையன்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சரளை பகுதியில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் வருகிற 18-ஆம் தேதி தோ்தல் பரப்புரை கூட்டத்தில் பேச உள்ளாா்.
கூட்டம் நடைபெறும் இடத்தை தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில் தவெக சாா்பில் தோ்தல் பரப்புரை கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று பேச உள்ளாா். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினா் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம்.
எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அலுவலா்கள் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அவா்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்று பொதுக் கூட்டத்துக்கான பணிகளை செய்து வருகிறோம். புதுச்சேரிக்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் வரலாறு படைக்கப் போகிறது.
சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். விஜயபுரி கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில்
கூட்டம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை எதிா்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனா். ஆனால் இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே, திட்டமிட்டபடி தவெகவின் தோ்தல் பரப்புரை கூட்டம் இங்கு நடைபெறும்.
அதிமுகவில் எம்ஜிஆா், ஜெயலலிதாவிடம் எப்படி எனக்கு செல்வாக்கு இருந்ததோ அதேபோல தவெகவிலும் உள்ளது. பாமக ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.
முன்னாள் மக்களவை உறுப்பினா் சத்யபாமா, மாவட்டச் செயலாளா்கள் பாலாஜி, பிரதீப்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

