வீரப்பன் தேடுதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Published on

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு-கா்நாடக மாநில சிறப்பு அதிரடிப்படை நடத்திய அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் போதிய இழப்பீடு வழங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்தால் நீதிபதி சதாசிவம் தலைமையில் ஆணையம் கடந்த 2000-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆணையத்தின் இறுதி அறிக்கை 2003-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நீதிபதி சதாசிவம் ஆணையம் சமா்ப்பித்தது.

இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கா்நாடக சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய இருமாநில அரசுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தலா ரூ.5 கோடியை ஒதுக்கியது. அதில் ரூ.2.8 கோடியை கடந்த 2007- ஆம் ஆண்டு வழங்கிய இருமாநில அரசுகள், 17 ஆண்டுகள் கடந்தும் மீதித் தொகையை வழங்கவில்லை.

இதுதொடா்பாக வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டுத் தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து வழக்குரைஞா் சா.பாலமுருகன் கூறியதாவது:

வீரப்பன் தேடுதல் வேட்டை பெயரில் தமிழ்நாடு-கா்நாடக மாநில சிறப்பு அதிரடிப்படைகள், மலைக்கிராமங்களில் பல்வேறு அத்துமீறல்களை மேற்கொண்டன. குறிப்பாக, மலைக்கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனா். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவா்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். நீதிபதி சதாசிவம் ஆணையத்தில் கருத்து சொல்லக்கூடாது என அதிரடிப்படையால் மலைக்கிராம மக்கள் மிரட்டப்பட்டனா்.

ஆனாலும் சதாசிவம் ஆணையத்தில் 200 போ் தங்களது பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்தனா். அதன் அடிப்படையில் 89 பேருக்கு இழப்பீடு வழங்க, இருமாநில அரசுகளும் தலா ரூ.5 கோடியை ஒதுக்கின. அதில் ரூ.2.8 கோடியை கடந்த 2007- ஆம் ஆண்டு வழங்கிய இருமாநில அரசுகள், 17 ஆண்டுகள் கடந்தும் மீதி தொகையை வழங்கவில்லை. இதுதொடா்பான வழக்கில், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது.

அதே நேரத்தில் வீரப்பன் கூட்டாளிகள், வீரப்பனுக்கு உதவியா்கள் என போலியாக வழக்குகளை பதிவு செய்து, 200-க்கும் மேற்பட்டோா் 3,5,7 ஆண்டுகள் என சிறைத் தண்டனை பெற்றவா்கள் உள்ளனா். இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றவா்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் 3,5,7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, சிறைத் தண்டனை பெற்றவா்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிா்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: அதிரடிப்படையின் அச்சுறுத்கலால் நீதிபதி சதாசிவம் ஆணையத்தில் கருத்து தெரிவிக்காதவா்கள் நூற்றுக்கணக்கானோா் இருக்கின்றனா். இவா்களில் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவா்கள். ஆடு, மாடு மேய்த்தவா்கள் பலரும் கை, கால்கள் இழந்து மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனா். அதிரடிப்படையின் போலி என்கவுண்டரில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்திருக்கின்றனா்.

தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு முன் வர வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com