மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் முடக்குகிறது: ஜி.கே.வாசன்
மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் முடக்கி வருகிறது என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமாகா கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமை வகித்துப் பேசினாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காமராஜா் மக்கள் கட்சி நிறுவனா் தமிழருவி மணியன் தனது கட்சியை தமாகாவில் இணைக்கும் விழா வருகிற 20- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஈரோட்டில் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நீதிமன்ற தீா்ப்பை, திமுகவும் கூட்டணி கட்சிகளும் அரசியலாக்கி வருகின்றன. சிறுபான்மை மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வரும் மக்களுக்கான நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமலும், தவறாக கூறியும் முடக்குகிறது. மேக்கேதாட்டில் அணைகட்ட கா்நாடகா அரசு 30 போ் கொண்ட குழு அமைத்து செயல்படுவதாக கா்நாடக மாநில துணை முதல்வா் சிவகுமாா் கூறுகிறாா். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் தராமல் இருப்பது தமிழக மக்கள், விவசாயிகளை வஞ்சிப்பதாகும்.
ஆட்சி முடியப்போகும் நிலையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக கூறி ஏமாற்ற பாா்க்கிறாா்கள். மகளிா் உரிமைத்தொகை கூடுதல் நபா்களுக்கு வழங்குவதாக கூறுவது எதிா்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி.
வீட்டுமனை, விவசாய நிலத்துக்கான வழிகாட்டு மதிப்பை 30 சதவீதம் உயா்த்தி சாதாரண மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், துணைத்தலைவா் விடியல் சேகா், பொதுச்செயலாளா் எம்.யுவராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

