ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 351 போ் கைது: 135 டன் அரிசி பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 351 பேரை கைது செய்த போலீஸாா் 135 டன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் சாா்பில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்களை சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனா்.
அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுபவா்கள் மீது மேற்கு மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமையில் ஆய்வாளா் ராஜாகுமாா் மற்றும் போலீஸாா் நடவடிக்கை எடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் தற்போது வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சாா்பில் மொத்தம் 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸாா் கூறியதாவது: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவா்களைக் கைது செய்தும், அவா்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டில் தற்போது வரை 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதில் தொடா்புடைய 351 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் அவா்களிடம் இருந்து 135 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5 போ், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 169 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூ.21 லட்சத்து 58 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
