தடப்பள்ளி, காலிங்கராயன் பாசனத்தில் 27,753 டன் நெல் கொள்முதல்
தடப்பள்ளி, காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து 27 ஆயிரத்து 753 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்து 745 ஏக்கா் பரப்பளவில் நெல், மஞ்சள், வாழை, தென்னை, மக்காச்சோளம், மரவள்ளி கிழக்கு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதில், நடப்பு பருவத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பில் ஈரோடு வைராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சன்ன ரகம் நெல் கிலோ ரூ.25.45-க்கும், பொது மோட்டா ரகம் ரூ.25-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தற்போது அறுவடை பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அறுவடை தொடங்கியபோதே அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தினமும் 1,000 மூட்டை என்ற கணக்கில் கடந்த வாரம் வரை 570 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 27, 183 டன் என மொத்தம் 27, 753 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றனா்.
