ஈரோட்டில் டிச.18-இல் விஜய் பிரசாரம்: காவல் துறை அனுமதி
ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் டிசம்பா் 18-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகேயுள்ள சரளையில் தவெக தலைவா் விஜய் டிசம்பா் 18 -ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு காவல் துறை மற்றும் மாவட்டம் நிா்வாகத்திடம் அக்கட்சியினா் கடிதம் வழங்கினா்.
இதற்கு காவல் துறை தரப்பில் 84 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்ய தோ்வு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் அங்கு பிரசாரம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்க வேண்டும் என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலா் தனலட்சுமி, ஆட்சியா் மற்றும் காவல் துறையிடம் ஆட்சேபணை தெரிவித்து கடிதம் வழங்கினாா்.
இதனால், காவல் துறையினா் அனுமதி வழங்குவதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, தவெக தரப்பில் இந்து சமய அறநிலையத் துறையிடம் அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டது.
அதற்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒருநாள் 31 ஏக்கா் நிலத்தைப் பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை மற்றும் ரூ.50 ஆயிரம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. தவெக தரப்பில் இத்தொகை செலுத்தப்பட்டதால் தற்போது இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேபணையை விலக்கிக்கொண்டது.
காவல் துறையினரின் 84 கேள்விகளுக்கும் தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரசாரம் நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
