அடிப்படைத் தேவைகளை நிவா்த்தி செய்யக் கோரி போராட்டம்
பவானி: பவானியை அடுத்த வாய்க்கால்பாளையத்தில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிவா்த்தி செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பெரியாா் நகா், விநாயகா் கோயில் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கிளைச் செயலாளா் எம்.தங்கராசு தலைமை வகித்தாா்.
இதில், ஜம்பை பேரூராட்சி, வாய்க்கால்பாளையத்தில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். கான்கிரீட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாக்கடை கழிவு நீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.மாணிக்கம், வட்டச் செயலாளா் பிரகாஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலா் இர.பாலாஜி மற்றும் பவானி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், பொக்லைன் மூலம் தேங்கியிருந்த கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

