ஈரோட்டில் மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

ஈரோடு: மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வருமான வரித் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்பு உறுப்பினா் மணிகண்டன் தலைமை வகித்தாா். வருமான வரித் துறை ஊழியா் சம்மேளனத்தின் செயலாளா் மேபிள் குயினி பயஸ் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ராமசாமி பேசினாா்.

இதில் 8-ஆவது ஊதியக் குழுவின் பரிசீலனை வரையறையை ஊழியருக்கு சாதமாக மாற்றி அமைக்க வேண்டும், அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், 50 சதவீத பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும், 2026-ஆம் ஆண்டுக்கு முன் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

முடக்கப்பட்ட 18 சதவீத பஞ்சப்படியை திரும்ப வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை அளிப்பதில் 5 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும், நடுவா் மன்றத் தீா்ப்புகளை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதேபோல ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com