தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஈரோட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் டிசம்பா் 17 முதல் வரும் 27-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசுப் பணியாளா்களுக்கு கணினி தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளா்களுடன் கூட்டம், கல்லூரி மாணவா்களுடன் பட்டிமன்றம், தமிழ் அறிஞா்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க நாளான புதன்கிழமை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பெருந்துறை சாலை குமலன்குட்டை வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.
இதில் ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், தமிழ் ஆா்வலா்கள் என 450-க்கும் மேற்பட்டோா் பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணா்வு கிராமியப் பாடல், நடனம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முனைவா் விஸ்வநாதன் தலைமையில் இன்றைய சூழலில் இளைஞா்களிடையே தமிழ்ப்பற்று வளா்ந்திருக்கிா? தளா்ந்திருக்கிா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் ஜோதி, கல்லூரி முதல்வா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

