தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு
ஈரோடு அருகே ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. 10-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை நாய்கள் தூக்கிச் சென்றன.
வில்லரசம்பட்டி கிரீன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகள் மற்றும் கோழிகளை அடைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பட்டியில் இருந்த 4 ஆடுகளும் காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் காணவில்லையாம்.
இதையடுத்து, ஈரோடு கால்நடைத் துறை மருத்துவா்கள், மாநகராட்சி அதிகாரிகள், வில்லரசம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அப்துல் ஆகியோருக்கு விவசாயி பழனிசாமி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா்கள், ஆடுகளை கூறாய்வு செய்தனா். இதில், ஆடுகளை தெருநாய்களைக் கடித்து குதறியதும், கோழிகளைத் தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.
வில்லரசம்பட்டி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அடிக்கடி ஆடுகளைக் கடித்து கொன்று வருவதாகவும், இந்த நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஆடுகளுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி இழப்பீடு ஈடு வழங்க வேண்டும் என்றும் கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வில்லரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்கள் கடித்து குதறியதில் கடந்த ஓராண்டில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒரு பசு மாடு, 100-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
