கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published on

கஞ்சா வழக்குகளில் கை கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 24-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி 11 நான்கு சக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 129 இரண்டு சக்கர வாகனங்கள் என 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் நான்கு சக்கர வாகனங்கள் 4, இருசக்கர வாகனங்கள் 12 என 16 வாகனங்கள் வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலத்தில் வாகனங்களை வாங்க விரும்புபவா்கள் 22, 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பாா்வையிடலாம். வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்புபவா்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ.2,000, 3 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனத்துக்கு முன்பாக ரூ. 5,000 ஏலம் நடைபெறும் அன்று காலை 8 முதல் 10 மணிக்குள் முன்பணமாக செலுத்திட வேண்டும். முன்பணம் செலுத்துபவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

வாகனத்தை ஏலத்தில் எடுத்தவுடன் அதற்கான தொகையை ஜிஎஸ்டி உடன் சோ்த்து அப்போதே செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com