இருசக்கர வாகனங்கள் மோதல்: வேட்டைத் தடுப்புக் காவலா் உள்பட இருவா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் வேட்டைத் தடுப்புக் காவலா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (40). மேட்டூரில் மின்சாதன விற்பனை கடை வைத்துள்ள இவா், தனது மனைவி அருணாவுடன் (33) குருவரெட்டியூா் வாரச் சந்தைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி, ஆனைக்குழிக்காட்டைச் சோ்ந்தவா் தசரதன் (26). சென்னம்பட்டி வனச் சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வந்த இவா், தனது நண்பரான ஜலகண்டாபுரம், சூரப்பள்ளியைச் சோ்ந்த சின்ன ஆனந்துடன் (36) சென்னப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
குருவரெட்டியூா் - அம்மாபேட்டை சாலையில் சென்றபோது செந்தில்குமாரின் வாகனமும், தசரதனின் வாகனமும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில், தலையில் காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலும், பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தசரதன் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனா்.
அந்தியூா் தனியாா் மருத்துவமனையில் அருணாவும், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சின்ன ஆனந்தும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

