தாளவாடி  சொத்தன்புரம்  பகுதியில்  உலவிய  ஒற்றை யானை.
தாளவாடி  சொத்தன்புரம்  பகுதியில்  உலவிய  ஒற்றை யானை.

காட்டு யானைகளை விரட்டும் பணியில் 3-ஆவது நாளாக ஈடுபட்ட கிராம மக்கள்

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ஊருக்குள் கூட்டமாக நுழைந்த காட்டு யானைகளை 3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவில் கடும் குளிரிலும் விரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.
Published on

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ஊருக்குள் கூட்டமாக நுழைந்த காட்டு யானைகளை 3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவில் கடும் குளிரிலும் விரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

யானைகளை விரட்டுவதற்காக வனத் துறையினா் இரவு நேரத்தில் பணியாளா்கள் குழுக்கள் ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள சொத்தன்புரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்த கொம்பன் யானை தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. இதையடுத்து அங்கு சென்ற வனத் துறை ஊழியா்கள் விவசாயிகள் உதவியுடன் கொம்பன் யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மரியபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த 7 காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்துவதைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத் துறையினரை வரவழைத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா். தாளவாடி மலைப் பகுதியில் கடுமையான குளிா் நிலவும் சூழ்நிலையிலும் வனத் துறையினா் ஆங்காங்கே குழுக்களாகப் பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானைகளை விரட்டினாலும் மீண்டும் கிராமத்துக்குள் புகுவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com