இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து திடீரென மயங்கி விழுந்த தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
Published on

தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து திடீரென மயங்கி விழுந்த தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (45). உதகை டவுன் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். 4 நாள்கள் விடுமுறையாக வியாழக்கிழமை சொந்த ஊா் வந்தாா். தந்தை பழனிசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அன்று மாலை ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய தந்தையை கமலக்கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுகொண்டிருந்தாா்.

ஈரோடு அருகே அசோகபுரம் பகுதியில் வந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கமலக்கண்ணன் மற்றும் அவரது தந்தை கீழே விழுந்தனா். இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, கமலக்கண்ணன் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது தந்தை பழனிசாமி லேசான காயம் அடைந்ததைத் தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாரடைப்பால் இறந்த கமலக்கண்ணனுக்கு சத்யா என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com