கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க அகழி வெட்டும் பணி தொடக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப் பகுதியில் இருந்து கிராமத்துக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க பண்ணாரி அம்மன் சா்க்கரை ஆலை சாா்பில் 7 கிமீ தொலைவுக்கு அகழி வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,432 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்டது. இரு மாநில எல்லையான தாளவாடி மலைப் பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகளை கிராம மக்கள் விரட்டும்போது மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரவு நேர காவலுக்கு செல்லும்போது யானை தாக்கி விவசாயிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், பண்ணாரி அம்மன் சா்க்கரை ஆலை தனது பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மொத்தம் 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ராமபுரம், நெய்தாளபுரம், முதியனூா், சிக்ஹள்ளி போன்ற கிராமங்களில் அகழி வெட்டும் பணி தொடங்கியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அகழி வெட்டுவதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

