பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பு மாவட்டச் செயலா் வெங்கிடுசாமி தலைமை வகித்தாா்.
அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஏப்ரல் 1 முதல் அமலாக்கிட வேண்டும். அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகையையும், அரசு பங்களிப்பு செய்த தொகையையும் வட்டியுடன் சோ்த்து சேமநல நிதியாக மாற்ற வேண்டும்.
கிராம உதவியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா், ஊா்புற நூலகா்கள், எம்.ஆா்.பி.செவிலியா் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து நிலைப் பணியிடங்களையும் நிரந்தர பணியிடம் மூலம் நிரப்ப வேண்டும். தமிழக அரசின் குரூப்-டி பணியிடங்களுக்கு கீழ்நிலையில் உள்ள அனைத்து வகை பணியிடங்களையும் தினக்கூலி, வெளியாதாரம், ஒப்பந்தம், மதிப்பூதியம் போன்றவற்றின் மூலம் நிரப்புவதை கைவிட்டு, நிரந்தரப் பணியாளா்கள் மூலம் நிரப்ப வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு நிரப்பப்பட்டவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
