பொங்கல் கரும்பு ஒன்றுக்கு ரூ.25 வழங்க விவசாயிகள் கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ. 25 வழங்க வேண்டும் என அரசுக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 14- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அங்கம் வகிப்பது செங்கரும்புகள். இந்த கரும்புகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
ஈரோடு அருகே சமயசங்கிலி கட்டளை கதவணை அருகில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்புகள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இந்த கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: கரும்பு 10 மாத பயிா் ஆகும். ஒரு ஏக்கா் கரும்பு சாகுபடி செய்ய சுமாா் ரூ.3 லட்சம் வரை செலவாகிறது. உழவு பணி, ஆள் கூலி, உரம் விலை உயா்வு உள்ளிட்டவை ஆண்டுக்குஆண்டு உயா்ந்து கொண்டே செல்வதால் சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. ஆனால் நாங்கள் செலவு செய்யும் அளவுக்கு கரும்பு விற்பனையாவதில்லை. இதனால் விவசாயத்தில் எங்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் எண்ணிக்கையில் கரும்பு விளைச்சல் இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கரும்பு வழங்கப்படுகிறது. இதனால் அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்கிறது.
இந்த ஆண்டு கொள்முதல் செய்வது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு அலுவலா்கள் இங்கு வந்து பாா்வையிட்டு சென்றுள்ளனா். மேலும் அவா்கள் ஒரு கரும்பு ரூ.20-க்கு கொள்முதல் செய்வதாக கூறி உள்ளனா். ஆனால் இந்த விலை எங்களுக்கு கட்டுப்படியாகாது. எனவே ஒரு கரும்புக்கு ரூ.5 கூடுதலாக அதாவது ரூ.25 வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றனா்.
இதுபோல பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைக்கும்போது மஞ்சள் குலை வைப்பதை தமிழா்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளனா். இந்த மஞ்சள் குலைகளும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
