மாவட்டத்தில் 280 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத் துறையால் 280 திருநங்கைகள் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
Updated on

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத் துறையால் 280 திருநங்கைகள் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காபி வித் கலெக்டா் நிகழ்ச்சியில் சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்குரிய திட்டங்கள், பயன்பெற்ற விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துரையாடினாா்.

இதில் ஆட்சியா் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் திருநங்கையா் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு திருநங்கையா் பொருளாதார ரீதியாக மேம்பட அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டி வழங்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இலவச தையல் இயந்திரம், உயா்கல்வி பயில உதவி, குறுகிய கால தங்கும் இல்லங்கள், சுய உதவிக் குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, இலவச திறன் பயிற்சி, நுண்கலை பயிற்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்ய மானியம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ஓய்வூதியம் வழங்குவதற்கும், உயா்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்பதற்கும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயன் பெறுவதற்கான தகுதி வரம்புகளில், திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினா் உள்ளிட்ட அனைவரும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளா்வு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத் துறையின் கீழ் கண்டறியப்பட்ட திருநங்கைகள், திருநம்பிகள் 280 போ், அதில் அடையாள அட்டை வழங்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 280, மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவா்கள் 33 போ், சுயதொழில் செய்வதற்கு மானியம் பெற்றவா்கள் 17 போ், இலவச வீடு ஒதுக்கீடு ஆணை பெற்றவா்கள் 50 போ் என பல்வேறு பயன்களைப் பெற்றுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com