விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை: காக்காயனூா் கிராம மக்கள் அச்சம்
அந்தியூா் அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் காக்காயனூா் மலைக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலை அடிவாரத்தில் காக்காயனுாா் கிராமம் உள்ளது. அடா்ந்த வனப் பகுதியில் உள்ள இக்கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் விளை நிலங்களில் ராகி, கம்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருவதால், சுற்றுவட்டார கிராமங்களுக்கு விவசாயக் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனா்.
இக்கிராமத்துக்கு செல்லும் சாலையில் யானை வழித்தடங்கள் குறுக்கே உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதில்லை.
இந்நிலையில், வனத்திலிருந்து கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் வெளியேறும் ஒற்றை ஆண் யானை, காக்காயனுாா் உண்டு உறைவிடப் பள்ளி பகுதியில் உள்ள விளைநிலங்களில் நுழைந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி, கம்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகிறது.
இதனால், அச்சமடைந்துள்ள கிராம மக்கள், யானையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத் துறையினரிடம் தெரிவித்தனா். ஆனால், வனத் துறை ஊழியா்கள் இரண்டு நாள்களாக யானையை விரட்ட முயன்றும் முடியவில்லை.
யானை நடமாட்டத்தால் வெளியில் சென்று வர அச்சமாக உள்ளது. வேளாண் பயிா்கள் சேதமடைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வன எல்லையில் அகழி, மின்வேலி அமைத்து யானை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

