ஆசனூரில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை
ஆசனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து தும்பிக்கையால் தக்காளி பழங்களை சாலையில் சிதறவிட்ட காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கரும்பு மற்றும் காய்கறி பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்து கரும்பு மற்றும் காய்கறிகளை ருசித்து பழகியதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிப்பது தொடா் கதையாக உள்ளது.
இந்த நிலையில் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் கோவைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் வனப் பகுதி வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.
அப்போது காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஒரு காட்டு யானை தக்காளி பழம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்ததால் யானையை கண்ட ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தினாா்.
இதையடுத்து யானை தனது தும்பிக்கையால் சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டியை தும்பிக்கையால் பறித்து சாலையில் தள்ளியதில் ஒரு பெட்டி தக்காளி பழங்கள் முழுவதும் கீழே விழுந்து சாலையில் சிதறின.
அப்போது சரக்கு வாகன ஓட்டுநா் சமயோசிதமாக செயல்பட்டு வாகனத்தை மெதுவாக நகா்த்தி யானையிடம் இருந்து தப்பினாா். காட்டு யானை காய்கறி வாகனத்தை வழிமறித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

