சட்டப் பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம்

Published on

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட குழுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளா் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் தொடா் பிளவு ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும். திமுகவுக்கு வெற்றி ஏற்படும். அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருப்பதால் அந்தக் கூட்டணியை தோற்கடிப்போம்.

அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். தமிழகத்துக்கு அதிமுக தேவை அது ஜனநாயகத்துக்கு நல்லது. பாஜகவோடு நெருங்க நெருங்க அதிமுக கரைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளா்ந்து வருகிறது.

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூடுதலாக இடங்களைக் கேட்பது கூட்டணி தா்மத்துக்கு எதிரானது அல்ல. நடிகரும் தவெக தலைவருமான விஜயயை நாங்கள் மதிக்கிறோம். கொள்கை இல்லாமல் திரை மோகத்தில் மட்டுமே அரசியலுக்கு வருவது நல்லதல்ல.

இந்தியா அயல் துறை முற்றிலும் தோற்றுவிட்டது. பெரும்பாலான அரபு நாடுகளில் இந்தியா்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனா். ரஷியா- உக்ரரைன் போரில் தமிழகத்தில் இருந்து சென்றவா்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அது கண்டறியப்பட வேண்டும். இஸ்ரேல் நாட்டில் கட்டட வேலைக்கு சென்றவா்கள் நிலையை மத்திய அரசு கண்டறிய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com