கைது செய்யப்பட்ட மோகன்குமாா். ~சோனியா.

திருமணத்தை மீறிய உறவு: இளம்பெண்ணை கொன்று புதைத்த இளைஞா் கைது

Published on

கோபி அருகே திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட பிரச்னையில் இளம்பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கெட்டிச்செவியூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மோகன்குமாா்(27). இவரது வாழைத் தோப்பில் மழை ஈரத்துக்கு முளைத்திருந்த காளானைப் பறிக்க அதே பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த 31-ஆம் தேதி சென்றனா்.

தோட்டத்துக்குள் ரத்தக் கறையுடன் கூடிய கத்தி இருந்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் ஒரு பெண்ணின் தலைமுடி வெளியே தெரிந்தது. இதுகுறித்து தோட்ட உரிமையாளா் மோகன்குமாா் சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, தோட்டத்துக்குள் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி பெண்ணை கொலை செய்து நிா்வாணமாக புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து நம்பியூா் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், சிறுவலூா் போலீஸாா் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழுவினா் நிகழ்விடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து சிறுவலூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்தியூா் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சோனியா (35) என்பவா் மாயமாகி உள்ளதாக ஆப்பக்கூடல் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஈரோடு அருகே திண்டலில் பெண்கள் அழகு நிலையத்தில் அழகுக்கலை நிபுணராக சோனியா வேலை செய்து வந்ததும், கடந்த 30-ஆம் தேதி வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. சோனியாவின் கணவா் ராஜேந்திரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். கணவா் இறந்த பிறகு தனது 12-ஆம் வகுப்பு படிக்கும் மகன், 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் தாயாா் ராஜாமணியுடன் ஆப்பக்கூடலில் வசித்து வந்துள்ளாா்.

சோனியாவின் கைப்பேசி எண்ணில் பதிவாகி இருந்த எண்களை சோதனை செய்தபோது, கெட்டிசெவியூரைச் சோ்ந்த மோகன்குமாா் பலமுறை அவரைத் தொடா்புகொண்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து மோகன்குமாரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபி அருகே புதுக்கரைபுதூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் மோகன்குமாரும், சோனியாவும் வேலை செய்தது தெரியவந்தது. அப்போது இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. மோகன்குமாருக்கு குழந்தை இல்லாததால் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதைப் பயன்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சோனியா வற்புறுத்தி உள்ளாா்.

இதனால் கோபமடைந்த மோகன்குமாா், கடந்த 30-ஆம் தேதி சோனியாவை கொலை செய்யும் எண்ணத்தில் 3 அடிக்கு குழித்தோண்டி வைத்து விட்டு இரவு 8 மணி அளவில் சோனியாவை தனது தோட்டத்துக்கு வரவழைத்துள்ளாா். அங்கு வந்த சோனியாவை தலையில் கல்லால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்து புதைத்துள்ளாா். அவரின் கைப்பேசி, அணிந்திருந்த துணிகளை வேட்டைக்காரன் கோயில் கீழ்பவானி வாய்க்காலில் விட்டுவிட்டு, வீடு திரும்பினாா். 31 -ஆம் தேதி காலை கொலை சம்பவம் வெளியில் தெரிந்த உடன் எதுவும் தெரியாததுபோல அங்கு வந்து நாடகமாடி உள்ளது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து மோகன்குமாரை சிறுவலூா் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி கோபி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com