அரசின் ஜாதிப் பட்டியலில் சோ்க்க மலை கிராம மக்கள் கோரிக்கை
ஈரோடு: அரசின் ஜாதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் திண்டல் சக்தி நகா், 4-ஆவது தெருவைச் சோ்ந்த சூரியசேகா் என்பவா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
எங்கள் வீட்டுக்கு முன் மாநகராட்சி சாலையில் 40 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்ட வேண்டும் என அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் சிலா் வந்தபோது தடுத்து நிறுத்தினோம். கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களது வீட்டில் உள்ள மரங்களை அப்புறப்படுத்துகிறோம் எனக் கூறிவிட்டு மாநகராட்சிக்கு சொந்தமான மரங்களையும் வெட்டி வாகனத்தில் வைத்து கடத்திச் சென்றுவிட்டனா்.
அதுபோல கடந்த 30- ஆம் தேதி அன்றும் மீண்டும் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மாநகராட்சி சாலையில் உள்ள 4 பெரிய மரங்களை அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் அப்புறப்படுத்தி உள்ளனா். மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், சமூக ஆா்வலா்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிப் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை:
இதுகுறித்து அந்தியூா் வட்டம் தாமரைக்கரையைச் சோ்ந்த மலைவாழ் பேடகம்பன லிங்காயத்து முன்னேற்ற நலச் சங்க நிா்வாகி ராயன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
பா்கூா் மலைப் பகுதியில் 33 கிராமங்களில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். ஈரோடு மாவட்டம், அந்தியூா், சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்களில் உள்ள 53 மலை கிராமங்களில் 60,000-க்கும் மேற்பட்ட பேடகம்பன சமூக மக்கள் வசிக்கிறோம். இதுவரை அரசின் ஜாதிப் பட்டியலில் இடம்பெறாத இச்சமூகத்தை பட்டியலில் சோ்க்க வேண்டும்.
பா்கூா் மலையில் உள்ள 33 கிராமங்களில் பா்கூா் அ, ஆ என இரு வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 3,182 ஹெக்டோ் விவசாய நிலங்கள் உள்ளன. சிலா் தோட்டம் அமைத்தும், சிலா் வானம் பூா்த்த பூமியாக விவசாயம் செய்கிறோம். இதில் 520 நிபந்தனைக்கு உள்பட்ட பட்டா நிலங்கள் உள்ளன. பூஜ்ய மதிப்பு நிலங்களும் உள்ளன. இதனால் இவா்கள் அரசின் எந்த சலுகையும் பெற முடியவில்லை. வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. நிபந்தனை, பூஜ்ய பட்டாவை நீக்கி அயன் பட்டாவாக மாற்றித் தர வேண்டும்.
பா்கூா் மலையில் 23,000 வாக்காளா்கள் உள்ளனா். பா்கூா் என ஒரே ஊராட்சியாக உள்ளதால் அடிப்படை வசதிகளை செய்ய நிதி கிடைப்பதில்லை. இதனை 5 ஊராட்சிகளாகப் பிரித்து நிதி வழங்கி சாலை, தெரு விளக்கு, மின் வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பா்கூா் மலை, தொல்லி, சுண்டப்பூா், வேலாம்பட்டி, குட்டையூா், கத்திரிமலைக்கு சாலை வசதி இன்றி, மக்கள் சிரமப்படுகின்றனா். இப்பகுதி மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வரும் நிலங்களை வனத் துறை, பிறா் கையப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை:
இதுகுறித்து பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலா் அ.ஜெகதீசன் தலைமையில் அளித்த மனு விவரம்: அந்தியூா் வட்டம், பச்சாம்பாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றிவிட்டனா். புதிதாக கட்டடம் கட்டப்பட்ட பிறகு மீண்டும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஓராண்டு ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்டவும், பிற அரசுத் துறை கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோா் அடிப்படை மற்றும் ஆரம்ப கட்ட சிகிச்சை கூட பெற முடியாமல் தவிக்கின்றனா். இப்பகுதியில், 3,000 பேருக்கு மேல் வசிக்கிறோம். ஏற்கெனவே இருந்த இடத்தில் அல்லது வேறு இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேகத்தடை அமைக்கக் கோரிக்கை:
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக் குழு செயலா் என்.பாலசுப்பிரமணி தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு கூரபாளையம் கிராமத்துக்கு உள்பட்ட ஊனாத்திபுதுாா் அருகே தேசிய நெடுங்சாலை செல்கிறது. இப்பகுதியில் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, காங்கயம், மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, நாமக்கல் பகுதிகளின் இணைப்பு சாலை பிரிகிறது. இச்சாலை கூரப்பாளையம், தோட்டாணிசத்திரம், சின்னியம்பாளையம் ஆகிய ஊா்களையும், பெருந்துறை- ஈரோடு சாலையை இணைக்கிறது.
இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். பள்ளி, கல்லுாரிகள் உள்ளதால் மாணவ, மாணவிகள் அதிகமாக பயணிக்கின்றனா். இந்த இடத்தில் தொடா்ந்து விபத்துகள் நடப்பதால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேகத்தடை அமைக்க தவறினால் வரும் 9-ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
232 மனுக்கள்:
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 232 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அரசுப் பளளி மாணவா்கள் 96 சதவீதம் பேருக்கு உயா்கல்விக்கு வழிகாட்டிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு ஆட்சியா் புத்தகம் வழங்கி கௌரவித்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
