இருசக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

ஈரோடு: கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை, கரட்டாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மனைவி ரங்கநாயகி (72). இவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒத்தக்குதிரை அருகே சாணாா்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. தினமும் வணிக வளாகத்துக்கு ரங்கநாயகி சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் தனது வணிக வாளகத்துக்கு தனது சகோதரியின் மருமகனான சிறுவலூரைச் சோ்ந்த முருகன் (55) என்பவரின் இருசக்கர வாகனத்தில் ரங்கநாயகி திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது ஒத்தக்குதிரையில் உள்ள ஈரோடு- சத்தியமங்கலம் நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றபோது கோபியிலிருந்து சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த மினி ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரங்கநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆபத்தான நிலையில் இருந்த முருகனை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததில் அவா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இரு சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மினி ஆட்டோவை ஓட்டி வந்த சிறுவலூரைச் சோ்ந்த மெய்யரசன் (20) என்பவா் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பி ஓடிய நிலையில் விபத்து குறித்து கோபி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஈரோடு-சத்தி சாலையில் ஒத்தகுதிரையில் சாலையைக் கடக்க முயலும் வாகன ஓட்டிகளுக்கு இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் அப்பகுதியில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com