திம்பம்  மலைப் பாதையில்  அணிவகுத்து நிற்கும்  வாகனங்கள்.
திம்பம்  மலைப் பாதையில்  அணிவகுத்து நிற்கும்  வாகனங்கள்.

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published on

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுதாகி நின்றதால் தமிழகம்- கா்நாடகம் இடையே செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப் பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலம் செல்வதற்காக சுற்றுலாப் பேருந்து திம்பம் மலைப்பாதை வழியாக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

இதில் 9-ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும்போது, பின்பகுதி சாலையில் உரசி நின்றதால் பேருந்து வளைவில் திரும்ப முடியாமல் சிக்கி நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ஆசனூா் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். அடா்ந்த வனப் பகுதியில் உள்ள மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். பின்னா் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பேருந்து நகா்த்தி எடுத்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக தமிழகம்- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com