தாளவாடி அருகே புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு
தாளவாடி அருகே புலி தாக்கியதில் மாடு உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (43) மாடுகள் வளா்த்து வருகிறாா். இவா் மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு செவ்வாய்க்கிழமை விட்டிருந்தாா். மாலையில் மாடுகளை தேடிச் சென்றபோது, அதில் ஒரு மாடு காணாமல் போனது தெரியவந்தது.
வனத் துறையினா் அங்கு வந்த தேடியபோது, மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த பசு மாட்டை வனத் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய புலி, பசு மாட்டை அடித்துக் கொன்றது தெரியவந்தது.
