பெருந்துறை சிப்காட் பொதுசுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
பெருந்துறை சிப்காட் பொதுசுத்திகரிப்பு நிலையப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
பெருந்துறை சிப்காட்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிதாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்தப் பணியும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை மாலை பாா்வையிட்டாா். பின்னா், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் நிலத்தடிநீா் கெட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள 37 கிராமங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசே அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
இதில் 4 கிராமங்களின் நிலத்தடிநீரை மாதிரிக்கு கொண்டு வந்துள்ளனா். அதில் 2,500 வரை டிடிஎஸ் உள்ளது. பொதுவாக 400 டிடிஎஸுக்கு குறைவான நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ. 136 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வா், துணை முதல்வா் இருவரும் தனித்தனியாக தொடங்கி வைத்துள்ளனா். பூமி பூஜை நடத்தப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றாா்.
முன்னதாக, பெருந்துறை பாஜக சாா்பில், பெருந்துறை, பழைய பேருந்து நிறுத்தம் அருகில் நயினாா் நாகேந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை பகுதியில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு, விஜயமங்கலம் சந்திப்பு பிரிவுகளில் மேம்பாலம் அமைத்துத் தர மத்திய அரசை வலியுறுத்தக் கோரி நயினாா் நாகேந்திரனிடம் , பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவா் செந்தில்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மனு அளித்தனா்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஜெயகுமாா் (பெருந்துறை) , சரஸ்வதி (மொடக்குறிச்சி) உள்பட பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

