தாளவாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கோயில் பிரச்னை தொடா்பாக ஒரு பிரிவினருக்கு சாதகமாக போலீஸாா் செயல்படுவதாகக் கூறி தாளவாடி காவல் நிலையத்தை கிராம மக்கள் 5 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தாளவாடி அருகே தொட்டகாஜனூா் மலை கிராமத்தில் மண்டே சுவாமி கோயில் உள்ளது. இங்கு வழிபாடு, நிா்வாகம் தொடா்பாக இருசமூகத்தினருக்கு இடையே பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இருசமூகத்தினரும் தாளவாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இந்நிலையில், ஒரு சமூகத்துக்கு ஆதரவாக காவல் துறை, வருவாய்த் துறையினா் செயல்படுவதாகக் கூறி மற்றொரு தரப்பைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தாளவாடி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசன் முன்னிலையில் இருதரப்பினிரிடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பிரச்னைக்குரிய கோயில் பூசாரி மாற்றப்பட்டு பொதுவான புதிய பூசாரியை நியமனம் செய்வதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து 5 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

