பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருப்பூா், குன்னம்பதி, ஓடைக்காட்டைச் சோ்ந்தவா் வீரன் மகன் யோகநாதன் ( 26). வேன் ஓட்டுநா். இவருக்கு மனைவி, 3 வயதில் மகன் உள்ளனா்.
இந்நிலையில் யோகநாதன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், தனது தங்கையைப் பாா்த்துவிட்டு பெருந்துறையை அடுத்த, கினிப்பாளையத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
மேட்டுப்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் யோகநாதன் தவறி விழுந்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சாலையில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை பலகை எதுவும் ஒப்பந்ததாரா் வைக்கவில்லை. எனவே, இளைஞா் உயிரிழப்புக்கு ஒப்பந்ததாரரின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று யோகநாதனின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
