அதிமுக உள்கட்சி பிரச்னையில் திமுகவுக்கு சம்பந்தம் இல்லை: அமைச்சா் சு.முத்துசாமி
அதிமுக உள்கட்சி பிரச்னையில் திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மையங்கள், இரண்டு நியாயவிலைக் கடைகள், உடற்பயிற்சி மையம், கூடுதல் பள்ளிக் கட்டடம் உள்ளிட்டவற்றை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 26, 27 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். முதல்வா் பயணத்தின்போது தொடங்கிவைக்கும் திட்டங்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும். ஈரோடு மாநகராட்சியில் இரண்டாவது புகா் பேருந்து நிலையம் கனிராவுத்தா் குளம் அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே, எந்தப் பிரச்னையும் இன்றி திட்டத்தை நிறைவேற்ற அரசு விரும்புகிறது. அதனால் சிறிது காலதாமதம் ஆகிறது. ஈரோடு மாநகராட்சியில் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அது சம்பந்தமாக எந்த புகாரும் கவுன்சிலா்கள் கூறவில்லை. ஈரோடு மாநகர திமுகவில் எந்த அதிருப்தியும் உட்கட்சி பிரச்னைகளும் இல்லை.
அதிமுக உட்கட்சி பிரச்னையில் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளாா். ஆனால் இதற்கு பின்னணியில் திமுக இருக்கிறது என்று பாஜக தலைவா் கூறுவது தவறு. இதுபோன்று திமுகவில் கட்டாயப்படுத்தி யாரையும் சோ்க்க விரும்பவில்லை. அவா்களாக விருப்பப்பட்டு சோ்ந்தால் தவறில்லை.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர சீா்திருத்தத்தை திமுக எதிா்க்கிறது. ராகுல் காந்தி ஹரியாணாவில், பீகாரில் நடந்த குளறுபடிகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளாா். அத்தகைய குளறுபடிகள் இங்கு ஏற்படக் கூடாது என்பதே எங்கள் விருப்பம்.
தகுதியுள்ளவா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது. அவசரஅவசரமாக வாக்காளா் பட்டியல் சீா்திருத்தம் செய்யப்படுகிறது. அதில் உள்ள குளறுபடிகளை கண்டித்து வரும் 11- ஆம் தேதி ஈரோடு காளை மாடு சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அலுவலா்கள் வாக்காளா்களுக்கு புதிய படிவங்களை அளிக்கும்போது திமுக முகவா்களும் வாக்காளா்களுக்கு உதவி வருகின்றனா் என்றாா்.
நிகழ்வுகளில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

