எா்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோட்டில் வரவேற்பு
பிரதமா் மோடி தொடங்கிவைத்த எா்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோட்டில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி உத்தரப் பிரசேத மாநிலம் பனாரஸ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக எா்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில், சேலம் கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயன், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகா், பாஜக மாவட்டத் தலைவா் செந்தில், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கவி உள்ளிட்டோா் வந்தே பாரத் ரயிலை வரவேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தனா்.
எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாள்கள் (புதன்கிழமை தவிர) இரு மாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது. பெங்களூரில் காலை 5.10 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு மதியம் 1.50-க்கு சென்றடையும். எா்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் வரும் 11- ஆம் தேதி சேவையை தொடங்குகிறது. முழுவதும் குளிா்சாதன வசதி கொண்ட 8 பெட்டிகளுடன், மணிக்கு 110 கிலோமீட்டா் வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 176 பயணிகள் பயணிக்கக்கூடிய வசதி இதில் உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்துக்கு இது நான்காவது வந்தே பாரத் ரயிலாகும். அதில் மூன்று ஈரோடு வழியாக இயக்கப்படுகின்றன . தொடக்க விழாவையொட்டி, ஈரோடு பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
