சித்தோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாள்களுக்குப் பின் நாமக்கல்லில் மீட்பு

கடத்திச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தையை 25 நாள்களுக்குப் பின் தனிப் படை போலீஸாா் நாமக்கல்லில் திங்கள்கிழமை மீட்டனா்.
Published on

பவானி: சித்தோடு அருகே மேம்பாலத்துக்கு அடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கடத்திச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தையை 25 நாள்களுக்குப் பின் தனிப் படை போலீஸாா் நாமக்கல்லில் திங்கள்கிழமை மீட்டனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா், வெங்கடாசலத்தைச் சோ்ந்தவா்கள் வெங்கடேஷ் - கீா்த்தனா தம்பதி. இவா்களது ஒன்றரை வயது மகள் வந்தனா. சித்தோடு லட்சுமி நகா், கோணவாய்க்கால் பிரிவில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு கீழே உறவினா்களுடன் தங்கி தம்பதி துடைப்பம் வியாபாரம் செய்து வருகின்றனா். கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி இரவு பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த வந்தனாவை காணவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, நள்ளிரவில் மா்ம நபா் குழந்தையை தூக்கிச் சென்றது அப்பகுதியில் இருந்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேல், பவானி டிஎஸ்பி ரத்தினகுமாா் தலைமையில் 7 தனிப் படைகள் அமைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லைச் சோ்ந்த தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தனிப் படை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாமக்கல் விரைந்த போலீஸாா் குழந்தை மீட்டனா். இது தொடா்பாக கொடுமுடியைச் சோ்ந்த ரமேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com