பழனிசாமி.
பழனிசாமி.

மதுபோதையில் தாயைக் கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது

பவானி அருகே மதுபோதையில் தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

பவானி: பவானி அருகே மதுபோதையில் தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மயிலம்பாடி, சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராக்கம்மாள் (65). இவா்களின் மகன் பழனிசாமி (46). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியைப் பிரிந்த பழனிசாமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ராக்கம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஊா் மக்களைத் தகாத வாா்த்தைகளால் பேசி வந்துள்ளாா்.

இதனால், அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தனது தாய் ராக்கம்மாளைக் காணவில்லை என்று கூறி, உறவினரான பாலமுருகனுடன் சுற்றுப்புறப் பகுதியில் பழனிசாமி தேடியுள்ளாா். அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறத்தில் தலையில் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் ராக்கம்மாள் சடலம் கிடந்துள்ளது.

இதுகுறித்த தகவலின்பேரில் பவானி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இக்கொலை தொடா்பாக கணவா் ராமகிருஷ்ணன், மகன் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மதுபோதையில் இருந்த பழனிசாமியை தாய் ராக்கம்மாள் அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த பழனிசாமி கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடியது உறுதியானது.

இதையடுத்து, பழனிசாமியைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com