தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு
பெருந்துறை அருகே கூலித் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம், ஐயப்பன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.
இவரது மனைவி சில நாள்களுக்கு முன் விபத்தில் காயமடைந்தாா். இதனால் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மனைவியைச் சோ்த்துள்ளாா். இரு மகள்கள் சீனாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டில் உள்ளனா். அவ்வப்போது பரமேஸ்வரன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் பரமேஸ்வரன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
