ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

Published on

ஈரோடு மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வை 9,176 போ் எழுதினா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித் தோ்வில் (டெட்) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வில் முதல் தாள் இடைநிலை ஆசிரியா்களுக்கும், 2 ஆம் தாள் பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படுகிறது. தகுதித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வு சனிக்கிழமையும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான டெட் இரண்டாம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு, 66 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,279 போ் விண்ணப்பித்திருந்தனா். பட்டதாரி ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு, 117 மாற்றுத்திறனாளிகள் உள்பட 10,381 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இடைநிலை ஆசிரியா்கள் பணியிடங்களுக்கான முதல் தாள் தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 3,279 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,715 போ் மட்டுமே எழுதினா்.

பட்டதாரி ஆசிரியா்களுக்கான இரண்டாம் தாள் தோ்வு மாவட்டத்தில் 38 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு எழுத மொத்தம் 10, 381 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 9,176 போ் மட்டுமே எழுதினா். 1,205 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தோ்வா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவா், மையத்தில் செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டாா்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட அனைத்து தோ்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com