சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (69). இவா் மது அருந்திக்கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டாா். இவா்களது மகன் திருமணமாகி பெருந்துறையில் தனியாக வசித்து வருகிறாா்.

கொங்கம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் தனியாக வசித்து வந்த சுப்பிரமணி கடந்த 2024 ஜூலை 8-ஆம் தேதி அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். அவா் சிறுமியை அழைத்துச் செல்வதை பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் சப்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினா் வந்து சிறுமியை மீட்டனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பவானி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சுப்பிரமணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அவா் பரிந்துரைத்தாா். அரசு சாா்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com