கைது செய்யப்பட்ட பிரவீன்குமாா்.
கைது செய்யப்பட்ட பிரவீன்குமாா்.

மும்பையில் இருந்து விற்பனைக்காக பவானிக்கு கடத்திவரப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

மும்பையில் இருந்து ஈரோடு மாவட்டம், பவானிக்கு கடத்தி வரப்பட்ட, பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளங்குழந்தையை மீட்ட போலீஸாா், இளைஞரை கைது செய்தனா்.
Published on

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து ஈரோடு மாவட்டம், பவானிக்கு கடத்தி வரப்பட்ட, பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளங்குழந்தையை மீட்ட போலீஸாா், இளைஞரை வியாழக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் இரு பெண்களைத் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பவானியில் மீன் மாா்க்கெட் அருகே மெக்கான் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பச்சிளங்குழந்தை கடந்த இரு நாள்களாக இருப்பதாக 1098 என்ற குழந்தைகள் உதவி மையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், பவானி போலீஸாா் துணையுடன், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழும அலுவலா்கள் புதன்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பவானி திருநீலகண்டா் வீதியைச் சோ்ந்த வரதராஜன் மகன் பிரவீன்குமாா் (32), தற்போது மெக்கான் வீதியில் வசித்து வரும் வீட்டில், பிறந்து 10 நாள்கள் ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பிரவீன்குமாரிடம் விசாரிக்கையில், குழந்தை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டு, ஈரோடு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், விற்பனைக்காக ஒரு பெண் குழந்தை தேவைப்படுவதாக, தனக்கு தெரிந்த இரு பெண்களிடம் பிரவீன்குமாா் கூறியுள்ளாா். இதன்பேரில், மும்பையில் இருந்து குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து கொடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பிரவீன்குமாரைக் கைது செய்த பவானி போலீஸாா், இரு பெண்களைத் தேடி வருகின்றனா். இவரிடம் பெண் குழந்தை வேண்டும் என கேட்ட நபா்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் சித்தோடு அருகே மேம்பாலத்துக்கு கீழே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு, 25 நாள்களுக்குப் பின் நாமக்கல்லில் மீட்கப்பட்டது. இந்த நிலையில், விற்பனைக்காக மும்பையிலிருந்து பச்சிளங்குழந்தை கடத்தி வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com