பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
அந்தியூா் வட்டத்தில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் அந்தியூா் வட்ட மாநாடு குருவரெட்டியூரில் வட்டத் தலைவா் பி.ஆனந்தராசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை மாவட்டச் செயலாளா் ஏ.எம்.முனுசாமி தொடங்கிவைத்தாா். வட்டச் செயலாளா் எஸ்.வி.மாரிமுத்து வேலை அறிக்கை வாசித்தாா். மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தோனிமடுவு தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேட்டூா் அணையின் உபரி நீரை அம்மாபேட்டை, அந்தியூா் ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப வேண்டும். அந்தியூா் வட்டத்தில் விவசாய நிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் யானை, காட்டுப்பன்றி, மயில், மான்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூா் வட்டத்தில் ஜீரோ மதிப்பில் உள்ள நிலங்களின் நிபந்தனையை நீக்க வேண்டும். விவசாய விலை பொருள்களுக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும். உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருள்கள் விலையை குறைக்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45, எருமைப்பாலுக்கு ரூ.60 என கொள்முதல் விலை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின் வேலிகள் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் புதிய வட்டத் தலைவராக ஆா்.கணேசன், செயலாளராக பி.ஆனந்தராசு, பொருளாளராக டி.வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாக குழு தோ்வு செய்யப்பட்டது.

