பவானிசாகா் வனச் சாலையோரம் நடமாடிய புலி
பவானிசாகா் அருகே சாலையோரம் நடமாடிய புலியை காரில் சென்ற பயணிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பவானிசாகா் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள மண் சாலையில் தெங்குமரஹாடா வனக் கிராமத்துக்கு செல்வதற்காக காரில் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர வனப் பகுதியில் புலி நடமாடுவதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
வாகனத்தில் இருந்த பயணிகள் தங்களது கைப்பேசியில் புலி நடமாடும் காட்சியை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். வாகனம் வருவதை கண்ட புலி மெதுவாக நடந்து அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
புலி நடமாடும் விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து வனத் துறையினரிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, புலி நடமாட்டத்தை விடியோ எடுத்த நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனா்.

