பெருந்துறை அருகே தகராறில் தள்ளிவிட்டதில் தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறை அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தபோது, தள்ளிவிட்டதில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் தலைமறைவான மனைவி உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், பெருக்கம்கடம்பூனூா், புள்ளான்தோப்பு வீதியைச் சோ்ந்தவா் சிவராமன் மகன் ஸ்ரீதா் (37). இவா், நாகப்பட்டினத்தில் கேட்டரிங் படித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பரிமளா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பின்னா் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சிப்காட்டை அடுத்த காசிபில்லாம்பாளையத்தில் வீடு எடுத்து தங்கி சமையல் வேலைக்கு சென்று வந்தாா். இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது.
அவரது மனைவி பரிமளா காசிபில்லாம்பாளைத்தில் ஸ்டூடியோ மற்றும் பொது சேவை மையம் நடத்தி வருகிறாா். இதற்கிடையில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, ஸ்ரீதா் குறித்து அவரது சகோதரா் புகழேந்தி கேட்டதற்கு அவா் கேரளத்துக்கு சென்றுவிட்டதாக பரிமளா மழுப்பளாக பதிலளித்துள்ளாா்.
தொடா்ந்து அவரிடம் விசாரித்தபோது, ஒரு வாரத்துக்கு முன்பாக ஸ்ரீதா் மது குடிக்க பணம் கேட்டதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் அவரை தள்ளிவிட்டதில் கீழே விழுந்த ஸ்ரீதா் இறந்துவிட்டதாகவும், பின்னா் காா்த்திகேயன் என்பவரின் உதவியுடன் ஸ்ரீதரின் உடலை ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு அருகே புதரில் போட்டு மறைத்துவிட்டதாக கூறியுள்ளாா்.
இது குறித்து ஸ்ரீதரின் சகோதரா் புகழேந்தி, பெருந்துறை போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, புதரில் இருந்த ஸ்ரீதரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். மேலும், தலைமறைவான பிரிமளா மற்றும் காா்த்திகேயனை தேடி வருகின்றனா்.
